}

Sunday, June 28, 2009

நானும் சத்துணவும் பின் என் பள்ளி வாழ்க்கையும்...

நண்பர்களே.. நமது நண்பர் திரு.பழனி சுரேஷ் அவர்களின்
அன்புக்கட்டளையை ஏற்று எழுதும் தொடர் பதிவாகும். முதலில் எனக்கு
இந்த தொடர் விளையாட்டில் பங்குபெற தயக்கம் இருந்தது.. ஆனால் இந்த
பதிவை எனது பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்யவே எழுதுகிறேன்..
மிகவும் ஏழ்மையில் இருந்த போதும் என்னையும் எனது தம்பியையும்
வேறு எந்த வேலைக்கும் அனுப்பாமல் நன்கு படிக்க வைத்ததற்கான ஒரு
....................(என்னால் எதையும் நிரப்ப இயலவில்லை) பதிவாகும்..

எனது பெற்றோர் மிகவும் ஏழ்மையில் இருந்த காலம்,நாங்கள் ஒரு ஊரில் கூலி வேலை செய்து எங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தோம். அப்போது பால்வாடி எனப்படும் சத்துணவுக் கூடங்களை அமைத்து அனைத்து ஏழைக்குழந்தைகளுக்கும் மதிய உணவு தரப்பட்டு வந்தது.. ஆகவே நானும் சத்துணவு(சத்தா இல்லையா என்பது வேறு விசயம்,, பசி வந்தால் பத்தும் பறந்து போகும் சத்தாவது ஒன்றாவது..)வேண்டியே முதன் முதலாக பள்ளிக்கு சென்றேன்.. ஆனால் நான்,எனது தம்பி மற்றும் எனது தந்தை வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் மகனும் விளையாடிக் கொண்டிருந்த போது, நாங்கள் அவனை விளையாட்டில் ஜெயிக்க அது பொறுக்காமல் அந்த பையன் என்னை காலால் எட்டி உதைததான். நான் அப்போது மணல் மேட்டிலிருந்து உருண்டு விழுந்த காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..இதை கண்ட எனது தாய் அந்த பையனை முதலாளி மகன் என்றும் பாராமல் அடித்து விட்டார்.. ஆகவே எனது சத்துணவு பள்ளியும்,எனது தந்தையின் வேலையும் போக நாங்கள் பிழைப்பை வேண்டி வேறு ஊர் நகர்ந்தோம்..

எனது தந்தைக்கு மற்றொரு ஊரில் வேலை கிடைக்க, நாங்கள் ரயில்வே புறம்போக்கு இடத்தில் ஒரு குடிசையை கட்டி அடுத்த கட்ட சோதனையை சந்திக்க தயாரானோம். அது சமயம் எனக்கும் 5 வயதாகவே என்னை பள்ளியில் சேர்க்க முடிவு செய்து அருகில் இருந்த பள்ளிக்கு சென்றோம்.. அது கிறித்துவ தொடக்க பள்ளி, மூன்றாம் வகுப்பு வரை இருந்தது.. எனது வலது கையை தலையின் மேல் சுற்றி இடது காதை தொட வைத்து பள்ளியில் சேர்த்தனர்.. ஆக எனது பள்ளி வாழ்க்கை தொடங்கியது.. எனது முதல் வகுப்பு ஆசிரியை பெயர் எல்லாம் சொல்ல மாட்டோம் ஒண்ணாம் வகுப்பு டீச்சர் என்றே கூறுவோம். அவ்வளவாக எனது முதலாம் வகுப்பு பற்றிய பள்ளி நினைவுகள் , நினைவில் இல்லை .ஆனால் முதல் வகுப்பில் கிடைத்த நணபர்கள் சிலர் இன்னமும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி தான்..

எங்களை லட்சுமி பாராமல் இருந்தாலும்,சரஸ்வதியின் அருள் நன்றாகவே இருந்தது. நான் எனது முதல் வகுப்பு முதல் 10 ஆவது வகுப்பு வரை தொடர்ந்து முதல் இடம் பெற்றேன்.இரண்டாம் வகுப்பில் நான் சேர்ந்த போது நான் வகுப்பு தலைவனாகவும் ஆக்க பட்டேன். ஒரு சமயம் எனது ஆசிரியை என்னை ஒரு வேளையாக வீடு வரை சென்று வர சொன்னார். நானும் சென்று அவர் கூறிய வேலையை முடித்து பள்ளிக்கு திரும்பினேன். அது மதிய உணவு வேலையாதலால் எனது ஆசிரியரும் என்னை சாப்பிட்டாயா என கேட்க நானும் ஆமாம் வீட்டில் பழைய சாப்பாடு சாப்பிட்டு வந்தேன்(ஏனெனில் நான் எனது சத்துணவை தவற விட்டு விட்டேன்) என பதில் சொன்னேன்.. அவர் என்னை திட்டி ,ஒரு தட்டு கொண்டு வர செய்து அவருடய சாப்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..நான் மிகவும் கூச்சத்துடன் தலை கவிழ்ந்து உண்டது இன்னமும் நியாபகம் உள்ளது.

மூன்றாம் வகுப்பு , எங்களுக்கு ஆங்கிலம் தொடங்கியது. எங்கள் வகுப்பு ஆசிரியை பெயர் தெரியாது ஆனால் அவரை அனைவரும் குண்டு டீச்சர் என கூப்பிடுவோம். அவர் தான் எனக்கு எனது பெயரை ஆங்கிலத்தில் எழுத கற்றுக்கொடுத்தார்.. அது முதல் அனைத்து ஆங்கில ஆசிரியர்களும் நன்கு கற்பிக்க எனக்கு ஆங்கிலம் நிறைய பிடித்து விட்டது.. எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி எனது பெற்றோரிடம் காட்ட அவர்களும் அதை ஒரு பெரிய சாதனையாக கருதி அண்டை வீட்டாரிடம் சென்று புகழ்பரப்பினர்..

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் எந்த சுவாரசியமான நிகழ்ச்சியும் அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வாரம் திங்களன்று அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி சில உறுதி மொழிகளை எடுப்பது வழக்கம்.. அப்போது அனைத்து வகுப்பு தலைவர்களும் மற்ற தம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில அடி இடைவெளியில் நின்று அவரவர் வகுப்பு ஆஜர் என சொல்ல வேண்டும், நானும் வகுப்பு தலைவன் என்பதால் எனது தந்தையை அழைத்து என் ஆஜரை பார்க்க வைத்தேன்..அவர் முகத்தில் தெரிந்த மகிழ்சி இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது..


நண்பர்களே.. இத்துடன் எனது ஆரம்ப பள்ளி வாழ்க்கை முடிந்தது.. எனது உயர் நிலை பற்றி பிறகு முடிந்தால் பார்ப்போம்...அதில் சில சோகங்களும், பல சந்தோசங்களும் ,சில காதல்களும் இருக்கும்..











27 பதிலடிகள்...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சத்துணவு(சத்தா இல்லையா என்பது வேறு விசயம்,, பசி வந்தால் பத்தும் பறந்து போகும் சத்தாவது ஒன்றாவது..)வேண்டியே முதன் முதலாக பள்ளிக்கு சென்றேன்..//

அந்த உணவில் குழந்தைகளின் அன்றாடத் தேவைக்குத் தேவையான புரதச் சத்துக்களில் 1/2 பகுதியும், கலோரி மதிப்பில் 1/3 பகுதியும் இருக்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும். முட்டை முதலியவை கூடுதலாக வழங்கப் படுகின்றன. அன்றைய தினங்களில் இந்த அளவுகள் அதிகமாக இருக்கும்.

அந்த மையங்களில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, இரும்புச் சத்து உள்ள அன்றாட உணவுப் பொருட்கள் பற்றிய விளக்கப் படங்கள் தொங்க விடப் பட்டிருக்கும்.

எளிமையான உணவாக வழங்கப் படுவதால் சத்துக் குறைந்தது என்று பொருள் அல்ல தலைவரே..,

ருசி வேண்டுமானால் சமைப்பவரைப் பொருத்தும் சாப்பிடுபவரைப் பொருத்தும் மாறுபடலாம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மூன்றாம் வகுப்பு , எங்களுக்கு ஆங்கிலம் தொடங்கியது//

எங்களுக்கும் அப்படித்தான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்..
எங்களுக்கு முட்டையெல்லாம் வழங்கப்படவில்லை.. எங்கள் உணவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது மட்டும் நினைவில் உள்ளது.. ஆனால் அது பசியை போக்கியது..

துபாய் ராஜா said...

உருக்கமான பதிவு.

வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து இந்த அளவு உயர்ந்ததற்கு வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ராஜா.. நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல உருக்கமாக உள்ளது.. உங்களின் பாதை முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ஞானசேகரன்.. பெற்றவர் மற்றும் கடவுள் புண்ணியத்தில் குறை ஒன்றும் இல்லை இப்போதைக்கு..

Menaga Sathia said...

நல்ல நெகிழ்ச்சியான பதிவு ப்ரதர்.என்னையும் கடந்தகாலத்திற்க்கு செல்ல வைத்துட்டுடிங்க.நாங்கள் 5 பேர் ஆனால் கடவுள் புண்ணியத்தில் இந்த சத்துணவு சாப்பாடு மட்டும் சாப்பிடவில்லை,அந்த கஷ்டத்திலயும் நாங்க தண்ணி ஊத்தி ஊறுகாய் தொட்டு சாப்பிடிருக்கிறோம்.இன்று நாங்கள் நல்ல நிளையில் இருக்கோம் ஆனால் அதை பார்க்க எங்கப்பா தான் இவ்வுலகில் இல்லை...உங்கள் பதிவை படித்ததும் கண் கலங்கி அப்பா ஞபாகம் வந்துடுச்சு.நான் ப்ளாக்லாம் எழுதுவது அப்பா இருந்திருந்தால் முதல் ஆளாய் அவர்தான் சந்தோஷப்பட்டிருபார்

மேலும் உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதுமட்டுமில்லாமல் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தோழர்களுக்கு நம் ராஜ்குமாருக்கு வரும் ஜூலை 1ம் தேதி பிறந்தநாள்,அனைவரும் அவரை வாழ்த்துங்களேன்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்கா.. கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க்கையை திரும்பிபார்திருக்கிறீர்கள்

வரப்போகும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க வசந்த்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

தீப்பெட்டி said...

நல்ல பகிர்வு..
இன்னும் உயர்வீர்கள் வாழ்வில்..

உங்கள் பெற்றோருக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்..

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தீப்பெட்டி.. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

கிரி said...

உங்க அம்மாவை எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் கண்டுக்காம இருந்துடாதீங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே... வாங்க..
நான் இப்பவும் அம்மா அப்பாவுக்கு பயந்த பையன்..!!

Anonymous said...

எனக்கும் சத்துணவு பற்றிய கடந்தகால நினைவுகள்.
80களில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சத்துணவு மட்டுமே என்னுடைய ஒவ்வொரு நாளின் முழு உணவு. ஆனால் அப்போது முட்டையெல்லாம் கிடையாது. ஒரு பெரிய கரண்டியில் இரு கரண்டி சோறு (சிகப்பு கலர், மொத்தமான அரிசி.. தற்போது எப்படியென்று தெரியவில்லை.), மற்றும் பருப்பு சாம்பார் (முள்ளங்கி, சுரைக்காய், நூக்கல் ‍இவைதான் அதிகமாக பயன்படுத்துவார்கள், ஆனால் காய் பீஸ் எப்பொழுதாவதுதான் கிடைக்கும்.)

Raja

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ராஜா.. வரவுக்கு நன்றி..

சுவாதி said...

எங்க காலத்தில் சத்துணவு கிடையாது. ஆனால் எல்லோருக்கும் பால் வழங்குவார்கள். டின் டின்னா பால் பவுடர் வரும். யார் உபயம் என்று தெரியவில்லை. பள்ளிக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து, ஒரு வாளியில் பால் பவுடரைப் போட்டு, தண்ணீரை ஊற்றிக் கரைத்து பாலாக்கி எல்லோருக்கும் கொடுப்பார்கள். இந்த வேலையெல்லாம் மாணவ, மாணவிகள் தான் செய்ய வேண்டும். முக்கால்வாசி நாள் பால் கரைக்கும் வேலை என் தலையில் விழும். பால் கரைக்கிறேன் பேர்வழி என்று பால்பவுடரையும் தண்ணீரையும் கெட்டியாக்கி அப்படியே விழுங்கியதும் உண்டு. பள்ளி நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள். ஏழையாய் பிறப்பதில் தவறில்லை. ஆனால் ஏழையாய் வாழ்வதுதான் தவறு. ஏழ்மையை வென்று விட்டீர்கள். நல் வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுவாதி.. நன்றி... நிச்சயமான வார்த்தைகள்..

சிநேகிதன் அக்பர் said...

"நீ எந்த அளவு அவமானப்படுத்தப்படுகிறாயோ அந்த அளவு உயர்வாய்" ரஜினி ஏதொவொரு இதழில் சொன்ன ஞாபகம்.
அவமானங்களையும் தோல்விகளையும் சந்திக்கப் பழகி விட்டால் பின்பு வெற்றி தான்.

// ஏழையாய் பிறப்பதில் தவறில்லை. ஆனால் ஏழையாய் வாழ்வதுதான் தவறு. ஏழ்மையை வென்று விட்டீர்கள். நல் வாழ்த்துக்கள்.
//

வழிமொழிகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜ் குமார்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்..
நன்றி.. உங்கள் வாழ்த்திற்கு..

Anonymous said...

பல சோகங்கள், பல சந்தோசங்கள் எல்லாம் ஓகே. சில காதல்... பள்ளிகொட வயசிலேயே... விளங்கும்..

Anonymous said...

உடனடியாக ஒரு நல்ல கண் டாக்டர் பார்க்க பீஸ், மற்றும் கண்ணாடி செலவை அனுப்பவும்...உங்க பதிவை படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//பல சோகங்கள், பல சந்தோசங்கள் எல்லாம் ஓகே. சில காதல்... பள்ளிகொட வயசிலேயே... விளங்கும்..//
மயில் அந்த காதல் எல்லாம் என்னோடது மட்டும் இல்லை.. என் நண்பர்கள் அவர்கள் காதலுக்கு நங்கள் செய்த உதவிகள் அதனால் அவர்கள்வீணாக போனது எல்லாம் தான்..

//உடனடியாக ஒரு நல்ல கண் டாக்டர் பார்க்க பீஸ், மற்றும் கண்ணாடி செலவை அனுப்பவும்...உங்க பதிவை படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு..//

வயசாகுது இல்ல.. அதான்..

Joe said...

அற்புதமான இடுகை.
ஏழ்மையிலிருந்து நன்றாக படித்து முன்னேறி வந்துள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் பல சாதனைகள் புரிக, முடிந்தால் மற்ற ஏழைகளுக்கும் உதவுக!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஜோ.. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

Jaleela Kamal said...

ராஜ் ரொம்ப கழ்டமான பதிவு, நாங்க கழ்டபட்ட பழைய நினைவுகள் எல்லாம் இப்ப நினைவுக்கு வருது ( அதை இப்போதும் நினைப்பதுண்டு).

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!