}

Wednesday, July 8, 2009

கதை (சத்தியமாக எந்த போட்டிக்கும் அல்ல!!)

மிகச் சரியாக துவாரத்தில் சாவியைப் பொருத்தி, மணிக்கட்டை வலதுபுறமாகத் திருப்பினான் மோகன். கண்கள் வாசலை நோக்க, கதவு திறந்திருந்தது. விரல்களால் கார்க்கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்துக்கொண்டே அதை ஒட்டி இருந்த கெஸ்ட் ஹௌஸைப் பார்க்க, வேலு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

வேலு, கண்ணனின் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் ஒரு எழுத்தாளன்; விதம் விதமாக எழுதுவான்; இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய்த் தேடுவான். ஒத்ததிர்வுகளால் வார்த்தைகளை ஒன்று சேர்த்து மூளையின் செல்களைத் தூண்டும் விதமாய் ஒரு கதை எழுத வேண்டும் என்பது அவனது நீண்ட நாளைய லட்சியம்.

அப்படிப்பட்ட சிந்தனையில், வார்த்தைகளை மாற்றி மாற்றி அடுக்கி அதன் அதிர்வுகளை கவனித்துக்கொண்டே தெருவில் நடக்கையில், தெருவோரம் கந்தலான நிலையில் வேலு கிடந்தான். பசியால் உடலைக் கூட அசைக்க முடியாமல், கண்கள் மட்டும் போவோர் வருவோரை நோக்கி அங்கும் இங்குமாய்த் திரும்பின. அனைத்துக் கண்களுக்கும் இவன் ஒரு காட்சிப் பொருளாய்த் தெரிய, இவன் மட்டும் அருகில் சென்று உதவி செய்து, தன்னுடன் அழைத்து வந்தான்.

வேலு வந்த சிறு தினங்களிலேயே கண்ணனை முழுதும் புரிந்து கொண்டான். காஃபி போட்டுத் தருவதும், புத்தகம், பேப்பர் இவற்றை சேகரிப்பதும் விருப்பப்பட்டால் தோட்ட வேலை செய்வதும் தன்னுடைய வேலை என சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.

ஒரு தாளில் தான் சேகரிக்கும் விபரங்களை எழுதி வேலுவிடம் படிக்கச் சொல்வான் கண்ணன். ஒன்றையே திரும்பத் திரும்ப, ஒவ்வொரு முறை தனக்கு காஃபி தரும் போதும் படித்து காட்டச் சொல்வான். நாள் கணக்காய், வாரக் கணக்காய், சில சமயம் மாதம் கூட, படிக்கச் சொல்வான்.

வேலுவின் ஒவ்வொரு மாற்றத்தையும் குறித்துக் கொள்வான். அவன் உறக்கத்தின் தன்மை கேட்டு அறிந்து கொள்வான், கனவுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் குறித்துக் கொள்வான். வேலு ஒரு முறை கூட எதற்கு என்று கேட்டதில்லை. திரும்பத் திரும்பப் படிக்க அவன் சலித்துக் கொண்டதும் இல்லை.

கிட்டத்தட்ட வேலு கண்ணனின் நடமாடும் ஆய்வுக் கூடம் போல் ஆகியிருந்தான். கண்ணன் பல கருத்துக்களை அவனுடன் பகிர்ந்து கொள்வான். கண்ணணாய்க் கேட்காமல் வேலு கருத்துரைக்க மாட்டான். வேலுவின் கருத்துக்களைக் கண்ணன் உன்னிப்பாய் கவனிப்பான். ஒரு நல்ல கலைஞனுக்கு, தன் கருத்தை மதிப்பவனை விட மறுக்காதவர் துணையே வேண்டும். அந்த வகையில் வேலு, கண்ணனின் கலைத் துணை போல் ஆகி இருந்தான்.

சிந்தனைகளைக் கலைத்தவனாய் மோகன் கண்ணனின் வீட்டிற்குள் பிரவேசித்தான். அந்த நகரத்தின் தலைசிறந்த மன நல மருத்துவர்களில் ஒருவன் மோகன். கண்ணனின் நெடுங்கால நண்பன். அதிகாலை நடை முடித்து, கண்ணனுடன் காஃபி அருந்துவது அவனது நீண்ட கால வழக்கம். மாடியின் இடது மூலையில் கண்ணனின் எழுதும் அறை. இன்று சற்றுத் தாமதமாய் வந்ததால் அவன் அங்குதான் இருப்பான்.

கண்ணன் தலை கவிழ்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி அறிந்ததால் யோசிக்காமல் கதவை தட்டினான்.

அவன் தலை திருப்பி, தலை அசைத்தான்.

"ஒரு சின்ன ஹெல்ப், நேத்து வேலு பார்க் போகும்போது சின்ன ஆக்ஸிடெண்ட், கால்ல அடி பட்டிடுச்சு, கீழ கிட்சன்ல நீயே காஃபி போட்டு வெய்யேன்.. நான் இப்போ வந்திடறேன்."

மோகன் சரி என்பதாய்த் தலை அசைத்து வெளியேற, மீண்டும் தலை கவிழ்ந்து எழுத ஆரம்பித்தான்.

ஒரு புன்னகையுடன் கண்ணன், தன் கோப்பையை வாயில் பொருத்தினான்.

"இன்னிக்கு, எனக்கு ஒரு சில டவுட்ஸ் உன்கிட்ட கிளியர் பண்ணிக்க வேண்டி இருக்கு!",

"தாராளமா, அது என்ன என்கிட்ட?!" என்றான் கண்ணன்.

"காரணம் இருக்கு, இப்போ என்கிட்ட வந்திருக்கிற கேஸ் ஒரு எழுத்தாளர். ஏதோ ஒரு சில கதைகள் எழுதி இருக்கார், அவ்வளவுதான். பெருசா யாருக்கும் தெரியாது. அவருக்கு ஒரு பிரச்சினை; அதுவும் அவர் எழுத்தாலே."

"புரியல, எழுத்தால என்ன பிரச்சினை?"

"அவர் கதையைக் கற்பனை பண்ணும்போது, அது ஒரு சிந்தனை அப்படிங்றத மறந்திடறாரு, அந்தக் கற்பனையை நிஜம்னு நம்பறார்.." மோகன் கண்களை மேல் நோக்கித் திருப்பி, இதற்கு மேல் எப்படிச் சொல்வது என சிந்தித்தான்.

"இப்போ, நீ முக்கியமா யாரையாவது சந்திக்கப் போற, நீ என்ன செய்வ? அவர் கிட்ட என்ன பேசணும்னு, முன்னாடியே கொஞ்சம் சிந்தனை பண்ணி வெச்சுக்குவே, அவருடைய பதில்கள் எப்படி இருக்கும்னு கொஞ்சம் நீயே சிந்திச்சும் வெச்சுக்குவே.. உன்னுடைய சிந்தனைக்கு மாறா இருந்தா எந்த மாதிரி பதில் சொல்லலாம்னும் யோசிப்ப. அதுல நீயே ரெண்டு பேராவும் இருப்ப, அதனால இத உன்னோட புத்தி பொய்னு கலைச்சிட்டு வெளியே வந்திரும். இங்க உன்னோட சிந்தனை கற்பனை மேல ஆதிக்கம் செய்யும். ஆனா அவருக்கு அப்படி இல்ல. அவர் பேசப் போற ஒருத்தர் கூட கற்பனைல தன்னுடைய கேள்விகளைக் கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பதில்களையும், அவர் மறுத்தா என்ன செய்யணும்கிறதையும் கற்பனை மூலமாவே யோசிப்பார். அவரோட சிந்தனை எல்லாமே கற்பனை வாயிலாவே நடக்கும். அதாவது கற்பனை இல்ல, மனம்னு சொல்லலாம், சிந்தனை மேல ஆதிக்கம் செலுத்தும்."

நீண்ட பெருமூச்சொன்றை விட்ட கண்ணன், "ஸோ, இப்போ நாம அவரோட கற்பனையாகிய சிந்தனையை நிறுத்தணும்னு சொல்ற?",

"இல்லை.. பிரச்சினை இதோட முடியல. இப்படி அவர் கற்பனை பண்ணி, கற்பனை பண்ணி, தான் சந்திக்கிற ஒவ்வொருத்தருடைய பேசும் விதத்தையும் பழகும் விதத்தையும் வெச்சு, அவங்கள அதி தீவிரமா உணர்ந்து அவங்களோட தன்மை மறு நாள் எப்படி இருக்கும்னு முந்தைய நாளே உணர்ந்து இருக்கார்!"

மோகன் சொல்வதையே உற்றுக் கவனித்து சிறிது நேர மவுனத்திற்குப்பின்..
"அதாவது ஒரு நாள் எல்லாரை விடவும் முன்னால இருக்கார்னு சொல்ற? சரி, இது அவருக்குத் தெரியுமா?"

"இல்லை, அவருக்குத் தெரியாது, அவருக்கு என்ன பிரச்சினைன்னு நாங்க கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவருக்குத் தெரியாமத்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்கோம். சரி, சொல்லு ஒரு எழுத்தாளனா இவரோட பிரச்சினை உனக்கு எப்படிப் படுது? உனக்கு ஏதாவது தோணுதா?"

"ஒரு நாள் முழுக்கத் தூங்க வெச்சுப் பார்க்கலாமே? சரி, இதால என்ன பிரச்சினை அவர்க்கு?"

"ம்ம், அதுவும் பண்ணிப் பார்த்தோம், ஆனா முழிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் அவரோட உணரும் தன்மை மாறிடறது. பிரச்சினைன்னு பார்க்கப்போனா, இப்போ அவரோட பார்வைக்கு தான் சந்திக்கிற எல்லாத்தையும் ஒரு நாள் கழிச்சு எப்படித் தெரியுமோ, அப்படியே இப்போ பார்க்கிறார். அதுவும் ஒருத்தர சந்திக்கும் போதுதான் இது நடக்குது. இதுக்கு வேற ஏதோ பண்ணனும். அதான் உன்கிட்ட கேட்டா ஏதாவது யோசனை சொல்வேன்னு?"

"ம்ம், கொஞ்சம் நிதானமா செயல்பட வேண்டிய ஒன்றுதான். மொதல்ல புதுசா யாரையும் அவர சந்திக்க விடாமப் பார்த்துக்கனும். கற்பனைக்கும் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை அவராகவே உணரச் செய்யணும். அவர் ஒரு எழுத்தாளர்ங்கிறதால இதையே உனக்குத் தோணின ஒரு கதையா சொல்லி அவரையே எழுதச் சொல்லலாம். ஏன்னா, தன்னுடைய பிரச்சினைகளைப் பத்தி சிந்திக்கிறதவிட கைப்பட எழுதும்போது அதன் மேல கவனம் கொஞ்சம் அதிகமா இருக்கும். அப்பறம் இருக்கவே இருக்கு யோகா, மெடிட்டேஷன் ஏதாவது பண்ணச் சொல்லலாம்!"..சற்று நீளமாய்ப் பேசிவிட்டு இரண்டு முறை மேலும் கீழுமாய் தலை ஆட்டி மோகனைப் பார்க்க.

"ம்ம், கரெக்ட், இத அவரே உணர்ந்தாதான் சரிப்படும். எனக்கு நீ இன்னொரு சின்ன ஹெல்ப் பண்ணனும். அவரைக் கண்டிப்பா எழுதச் சொல்லணும். இருந்தாலும் இத ஒரு கதை வடிவில நீ எழுதிக் குடுத்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும். அவரால ஒரு வேளை எழுத முடியலைன்னா உன்னுடைய கதையக் காட்டிப் படிக்கச் சொல்லலாம் இல்ல.. இதக் குடுத்து நீங்களா இருந்தா எப்படி எழுதுவீங்கன்னு கேட்கலாம்"

கெஞ்சும் விதமாய்க் கேட்டுவிட்டு அவனையே பார்க்க,

"சரி, எழுதிட்டாப் போச்சு. ஆனாலும் உனக்கு உன் வேலை மேல இவ்வளவு அக்கறை இருக்க கூடாதுடா. நேத்து இந்த நேரம் யாருடைய ஃபோனையோ அட்டன்ட் பண்ணப் போய், வைஃப் பாத் ரூம்ல வழுக்கி விழுந்து சீரியஸ்ஸா இருக்கறதா சொன்ன, இப்போ வந்து பேஷண்ட்டப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்க... .கொஞ்சம் குடும்பத்தையும் பார்த்துக்கோ!"

சிரிப்புடன் கண்ணன் சொல்ல, ஏதும் பேசாமல் மோகன், "நீ சொன்னதுக்கு அப்பறம்தான் ஞாபகமே வருது.. நான் ஹாஸ்பிடல் போகணும். சரி.. நாளைக்குப் பார்க்கலாம்.. கதைய மறந்திடாத"

அவன் எழுந்து கை குலுக்க, கண்டிப்பாய் என்பதாய் கண்ணன் தலை அசைத்தான்.

மோகன் கார்க் கதவை மூடி வெளியே செல்வதற்காக கதவு திறந்துள்ளதா எனப் பார்க்க.. வேலு அப்போதுதான் திறந்து வைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அவசர அவசரமாக மொபைலில் ஹோம் என்பதைக் கண்டுபிடித்து அழைக்க, எதிர் முனை கிடைத்ததும் கத்தினான். "பாத்ரூம் பக்கம் மட்டும் போய்டாத..."..

பதிலுக்கு பதிலாக ஏதோ ஒரு அலறல் சப்தம் கேட்க அவன் செய்வதறியாது திகைத்தான்.

சிறிது நேரம் கழித்து நீர் விழும் சப்தம் மட்டும் கேட்க, அவன் காரை விரைந்து இயக்கினான். அவனுடய கார் இயங்கும் வேகத்தை விட அவன் இதயம் இயங்கும் வேகம் அதிகமாய் இருப்பது போல் தோன்றியது.

வீட்டிற்கு மிக அருகில் வந்தும் அவனால் சமாதானம் கொள்ள இயலவில்லை. தன்னுடைய தவற்றிற்கு வருந்தி விழி மூடி இங்கும் அங்குமாய் தலை அசைக்க திடீரென, வேலு வீட்டை விட்டுக் கிளம்பியது பிம்பம் போல் தோன்றியது



கவுண்டர் அட்டாக் : மக்களே.. இவன் இம்சை தாங்கல்.. யாராச்சுக்கு இந்த கதை புரியுதா? இதுக்கு பேர் கதையா?

10 பதிலடிகள்...:

தினேஷ் said...

சாமி முடியல ... கொல வெறி ...ஆனா உங்க கதை கரு நல்லா இருக்கு .. சூப்பர் ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன் .. வரவுக்கும் வசவுக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .. என்னங்க யாராச்சும் கதைய சொல்லுவாங்கனு பாத்தா எங்க !!!!

தீப்பெட்டி said...

பாஸூ நல்லாத்தான இருந்தீங்க..
..

பேசாம இந்த கதைய எதாவது போட்டிக்கு அனுப்புங்க,,
பின் நவீனத்துவ விருது கிடைக்குதானு பாக்கலாம்..
:))

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தீப்பெட்டி... இது வாழ்த்தா இல்ல வசவா? எனக்கு என்னமோ வஞ்சபுகழ்ச்சி மாதிறி இருக்கு...

தினேஷ் said...

/என்னங்க யாராச்சும் கதைய சொல்லுவாங்கனு பாத்தா எங்க//

என்ன நேத்து ரெண்டு ரவுடிக கைபுள்ள சிக்கிடுச்சுனு புரட்டி எடுத்தாங்களாம் உங்கள

Starjan (ஸ்டார்ஜன்) said...

ந‌ல்லா இல்லை அப்ப‌டின்னு சொல்ல‌ மாட்டேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன்.. அப்படியா? நல்லது நல்லது..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஸ்டார்ஜன்.. நன்றி..

தீப்பெட்டி said...

//மாதிறி இருக்கு//

உங்களுக்கு கற்பூர புத்தி பாஸ்.. உடனே பத்திக்கிடீங்களே..

;))

குறை ஒன்றும் இல்லை !!! said...

சுட்டுட்டீங்களே சூரியனே !!!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!