}

Saturday, August 29, 2009

வாழ வேண்டியது தமிழா இல்லை தமிழரா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழ்குடி!!
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !!
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !!!
யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவதெங்ககும் காணோம்!!!!

இவை மட்டும் இன்றி இன்னும் இன்னும் பலச் சிறப்புகள் நம் தாய் மொழியாம் தமிழுக்கு உண்டு.. அதை அணுவளவும் மறுப்பதற்கில்லை..


ஆனால் தமிழால் மட்டும் எத்தனை தமிழனை வாழ வைக்க இயலும்? அன்றும் இன்றும் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமே வாழ வைக்கிறதே தவிர தமிழனை அல்ல.. இன்றைய மிக முக்கிய விவாதமாக கருதப்படுவது தாய்மொழிக்கல்வி.. கடைப்பலகை முதல் கழிப்பிடம் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..அதிலும் சுத்த தமிழ் என்று வேறு பல கொடுமைகள்... இதனால் என்ன உபயோகம்? இந்த லட்சணத்தில் உயர் கல்வி வரை தமிழில் படிக்க வகை செய்ய போகிறதாம்(செய்து விட்டதா??) அரசு!!! அப்படி தமிழால் படித்தால் கண்டீப்பாக முன்னேறவே இயலாது என்பது சத்தியமான உண்மை...

தாய் மொழிக்கல்வி என்றவுடன் நான் அனைவரும் எடுத்துக்காட்டாக கூறுவது ஜப்பான், சீனா போன்ற நாடுகளை தான்.. ஆனால் அது தவிர ரஷ்யா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் தத்தம் தாய் மொழிகளிலேயே கல்வியை கற்க வழி செய்துள்ளன.. அவை இப்படி வளர்ந்த நாடாக காரணம் தாய் மொழிக்கல்வியே .. ஆனால் நமது பிரச்சினை வேறு.. பெயரில் நாடு என ஒன்று இருப்பதால் மட்டும் தமிழகம் தனி நாடாகி விடாது.. ஒரு பெரிய ஜன நாயக(?) நாட்டின் ஒரு மாநிலமே !!! ஆனால் இன்னமும் பிடிவாதமாக தமிழ் மொழியில் தான் கற்க வேண்டும் என கூறுவது ஏன் என தெரியவில்லை..

நம் தமிழகத்தை தவிர ஏனைய பிற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மக்கள் தேசிய மொழியாம் ஹிந்தியையும், சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் கற்பது நம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி ஆதாம் ஆப்பிள் போல மறைத்து வைக்கப்பட்டுள்ளது!!! நம்மில் எத்துனை பேருக்கு ஹிந்தி தெரியும்? ஹிந்தி தெரியாமல் எத்துனை பேர் அடுத்த மாநிலங்களில் கஷ்டப்பட்டுள்ளீர்? நான் ஒரு சமயம் ஹைதியில் இருந்த போது நான் பட்ட கஷ்டம்!!!! நமக்கு ஹிந்தியில் தெரிந்தது சில, இல்லை இல்லை மிக சில வார்த்தைகளே.. ஏக், தோ முதல் பத்து வரை, ருக்கோ, ஜாவோ, கித்னா ரூப்யா என்பன அவற்றில் சில....

அங்கே காய் கறி வாங்க இல்லை வேறு ஏதாவது பொருட்கள் வாங்க செல்லும் போது பல வித அனுபவங்கள்!!!! நமக்கு அறைகுறையாக தெலுங்கும் தெரியும் ஆனால் உபயோகப்படுத்த பயம்.. ஏனென்றால் ஸ்தாவாக்கு பதிலாக ஒஸ்தாவா என்றால் அவ்வளவு தான் முடிந்தது கதை.. ஆக தெலுங்கும் பயன் படுத்த பயம், தமிழ் பேசினால் அது வேற்று கிரக வாசியை போல.. ஆங்கிலத்தில் பேசினால் அடுத்த மாநிலத்தை(நம்ம ஊருதான்) சேர்ந்தவன் என நாமே காட்டி கொடுத்தது போல் ஆகி விடும். நான் தான் புத்தி சாலி ஆயிற்றே அரை குறையாய் படித்ததை வைத்தே வேலையில் இருக்கும் போது அரை குறை ஹிந்தியை வைத்து சமாளிக்க முடியாதா என மனப்பால்( !!!) குடித்து பேரத்தில் இறங்குவேன்.. நான் பொருள் கேட்கும் அழகே தனி(!!) என்னமோ ஹிந்தி பண்டிட் போல கித்னா ரூப்யா எனக்கேட்பேன்.. அதற்கு அந்த நபர் 10 வரை கூறினால் பிரச்சினை இல்லை.. ஏனென்றால் நமக்கு தெரியும்.. ஆனா அவர் பத்துக்கு மேல் 11, 20, 30 என சென்றால் அவ்வளவு தான்.. இரு கைகளையும் மேலே தூக்காத குறையாக சரணாகதி அடைந்து விடுவேன்.. பிறகு ஆங்கிலம் தான்.. ஆங்கிலத்தில் கேட்டால் முதலில் அவர் ஹிந்தியில் எவ்வளவு சொன்னாரோ அதை விட ஒரு சில ரூபாய்கள் கூட தான் கேட்பார்கள்!!! இப்படி இழந்தது பல!!!

ஆக, அடுத்த மாநிலத்தில் பிச்சை எடுக்க கூட தேசிய மொழியோ , இல்லை அந்த மாநிலத்தின் தாய் மொழியோ அவசியம்.. பிற மாநிலங்களில் வேறு மொழி பேசினால் மரியாதை இருக்காது.. ஆனால் நம் மாநிலத்தில் தமிழ் தவிர மற்ற மொழிகள் அது புரியாத மொழியாக இருந்தாலும் அதற்கு தரப்படும் மரியாதையே வேறு!!! அதற்கு காரணம்.. தமிழ் மொழி மேல் உள்ள வெறுப்பு அல்ல.. பிற மொழிகள் மேல் உள்ள காதல்.. ஒரு குழந்தையிடம் ஒரு பொருளை தொட வேணாம் என சொன்னாலோ இல்லை பார்க்க வேணாம் என சொன்னாலோ அது தன் கையில் வைரமே இருந்தாலும் மறைத்து வைக்கப்பட்ட பொருளைத் தேடித்தான் போகும்.. அது போலவே நாமும்.. காலங்காலமாக மற்ற மொழிகளை கற்க விடாமல் அதன் மேல் ஒருவித ஈர்ப்பு !!! நம் தமிழக சினிமாக்களில்
படபடவென ஆங்கிலம் பேசும் கதா நாயகனை( பெரிய இடத்து பெண் சரோஜா தேவி முதல் சிவப்பதிகாரம் மம்தா வரை) கேட்ட (இங்கு பார்த்த வராது!!) உடனே காதலிக்கும் கதா நாயகிள் ஏராளம். இன்று ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயியை கேட்டால் அவர் சொல்லுவார் தம் பிள்ளை நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேணும் என!!! அதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் அந்நிய மொழி எனில் அது ஆதாம் ஆப்பிளை போல ஆசை வருவது ஒன்றும் தவறில்லை எனவே தோணுகிறது..

200 ஆண்டுகள் அந்நிய தேசத்திடம் அடிமைப்பட்டும் அழியாத தமிழ் மொழியா மற்ற மொழிகளை கற்பதால் அழிந்து விடப்போகிறது? ஆகவே என்னைப்பொறுத்தவரை தமிழ் தமிழனோடு பேச மட்டுமே போதும்.. பிற மொழிகளை கற்றால் தான் தமிழன் முன்னேர முடியும்.. தமிழன் முன்னேறினால் கூடவே தமிழும் முன்னேறும்.. என் குழந்தைகளை முடிந்தால் தமிழ் மொழியின்றியே படிக்க வைக்க முயற்சி செய்வேன்.. அவர்கள் வீட்டில் பேசும் போது தமிழ் தானாக வந்து விட்டு போகட்டும் ..ஆனால் தமிழ் மொழியை எழுதி படித்தால் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாது.... இதைக்கண்டதும் பல பேருக்கு கோபம் வரலாம்.. நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. நீங்கள் தமிழால் முன்னேறிய ஒருவரை(நிச்சயமாக அரசியல் வாதியை அல்ல) காட்டுங்கள், நான் அதே தமிழை மட்டும் கற்றதால் வீணாண அல்லது தமிழை கற்காமல் வேறு மொழி கற்றதால் முன்னேறிய 100 பேரை அடையாளம் காட்டுகிறேன்..இன்றும் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டிக்கிடந்த BPO போன்ற வேலைகளுக்கு தாய்மொழி பாதிப்பால் வேலை கிடைக்காதோர் ஏராளம்...

மொழி கருத்துகளை பரிமாறவே தவிர உணர்ச்சி பூர்வமாக அணுகக்கூடியது அல்ல... நீங்கள் நினைக்கலாம் இப்படியே விட்டால் தமிழ் அழிந்து போய் விடும் என்று.. அப்படியெனில் எழுத்தே இல்லாத படுகு போன்ற மொழிகள் இன்னமும் பேசப்பட்டு வருவது எப்படி? நம்மில் கூட பலர் சிறு வயது முதலே தமிழ் மொழியை அறவே தவிர்த்து பிற மொழிகளால் மட்டும் பாடங்களை கற்று உயர்ந்தாலும் இன்னமும் அவர்கள் தமிழிலேயே உரையாடிக்கொண்டுள்ளார்களே!!!மொழி காலப்போக்கில் மாறலாம் ஆனால் அழியாது,.,எங்கு வாழ்ந்தாலும் வலித்தால் அம்மா என்றே அழத்தோணும்..

ஆக தொண்மையான தமிழ் மொழி யாராலும் அழிக்க முடியாதது,,அதை யாரும் பாதுகாக்கவும் வேணாம் காப்பாற்றவும் வேணாம்.. வேண்டுமானால் தமிழனை காப்பாற்றுங்கள்.. தமிழ் தானாக வளரும்...



ஒரு உண்மை : முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

52 பதிலடிகள்...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"//

நியாயமான கேள்வி அண்ணாச்சி

ஆ.ஞானசேகரன் said...

//ஒரு உண்மை : முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"//

நெத்தியடி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஆக தொண்மையான தமிழ் மொழி யாராலும் அழிக்க முடியாதது,,அதை யாரும் பாதுகாக்கவும் வேணாம் காப்பாற்றவும் வேணாம்.. வேண்டுமானால் தமிழனை காப்பாற்றுங்கள்.. தமிழ் தானாக வளரும்...//

உண்மைதான்,.. ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை நண்பா... ஒருவனுக்கு தாய் மொழி அவனின் அடையாளம். மொழியை வளைமை படுத்தாமல் விட்டுவிட்டால் அதனுடன் சேர்ந்தே அவனும் அவன் அடையாளமும் அழியும் என்பது உண்மை.

அதே போல் ஏதோ காய்கறிகள் வாங்க பள்ளிப்படிப்பில் சுமையை கூட்டுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. ஒரு மொழியை எப்பவேனாலும்,யார்வேனாலும் விருப்பப்பட்டால் கற்றுக்கொள்ள முடியும் அதற்காக கட்டாய பாடம் அவசியமற்றது.

தமிழ் நாட்டில் தமிழ் தெரியாத ஒருவரை யாரும் ஏமாற்றவோ, அவமதிக்கவோ செய்வதில்லை மாறாக அவருக்கு உதவுகின்றோம். வட மாநிலத்தில் அப்பயா? இதை பார்த்தே அந்த மொழியின் அடையாளம் புரியும்..... தேவையுமற்றது

கருத்து பரிமாற்றதிற்கு நன்றி தலைவா

Anonymous said...

//ஸ்தாவாக்கு பதிலாக ஒஸ்தாவா என்றால் அவ்வளவு தான் முடிந்தது கதை//

உங்க பதிவை படிக்க வரும் பொழுதே என் கணவரிடம் சொன்னேன் சிரிப்புக்கும் உத்தரவாதம் என்று:-)

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ராஜ் ஆனால் "தமிழனை காப்பாற்றுங்கள் தமிழ் வளரும்" என்று சொல்வது தான் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை..
எனக்கு தெரிந்தவரை நறைய தமிழர்களே தமிழில் பேசுவது மட்டம்,பட்டிக்காட்டுத்தனம்,என்று நினைக்கும் வரை மேல் சொன்ன வாசகம் சாத்தியமாக முடியாது:(

எனக்கு தெரிந்ததை சொனேன்..ஏதேனும் தவறாக கூறி இருந்தால் இந்த கமெண்ட்டை ரிஜெக்ட் செய்து விடுங்கள் ராஜ் ..


அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"//

நியாயமான கேள்வி அண்ணாச்சி//

வாங்க சுரேஷ்.. நன்றிங்க..ஆமாங்க.. இன்னும் இப்படி கேட்க ஆள் இருக்குங்க!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அதே போல் ஏதோ காய்கறிகள் வாங்க பள்ளிப்படிப்பில் சுமையை கூட்டுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. ஒரு மொழியை எப்பவேனாலும்,யார்வேனாலும் விருப்பப்பட்டால் கற்றுக்கொள்ள முடியும் அதற்காக கட்டாய பாடம் அவசியமற்றது.//

வாங்க ஞானசேகரன்.. நான் காய்கறி வாங்க கூட முடியவில்லை என்பது போன்ற அர்த்தத்தில் கூறினேன்.. பள்ளி படிப்பு சுமையில்லை ஏனென்றால் 8 வயது வரை குழந்தைகளுக்கு எந்த மொழியையும் எளிதில் கற்க இயலும்!!!

// தமிழ் நாட்டில் தமிழ் தெரியாத ஒருவரை யாரும் ஏமாற்றவோ, அவமதிக்கவோ செய்வதில்லை மாறாக அவருக்கு உதவுகின்றோம். வட மாநிலத்தில் அப்பயா? இதை பார்த்தே அந்த மொழியின் அடையாளம் புரியும்..... தேவையுமற்றது//
தமிழ் மொழி மேல் உள்ள வெறுப்பு அல்ல.. பிற மொழிகள் மேல் உள்ள காதல்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உங்க பதிவை படிக்க வரும் பொழுதே என் கணவரிடம் சொன்னேன் சிரிப்புக்கும் உத்தரவாதம் என்று:-)//

வாங்க அம்மு.. மிக்க நன்றிங்க..

// நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ராஜ் ஆனால் "தமிழனை காப்பாற்றுங்கள் தமிழ் வளரும்" என்று சொல்வது தான் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை..
எனக்கு தெரிந்தவரை நறைய தமிழர்களே தமிழில் பேசுவது மட்டம்,பட்டிக்காட்டுத்தனம்,என்று நினைக்கும் வரை மேல் சொன்ன வாசகம் சாத்தியமாக முடியாது:(//

அதாங்க .. நாம் காலங்காலமா பிற மொழிகளை காதலித்துக்கொண்டிருக்கிறோம்..

// எனக்கு தெரிந்ததை சொனேன்..ஏதேனும் தவறாக கூறி இருந்தால் இந்த கமெண்ட்டை ரிஜெக்ட் செய்து விடுங்கள் ராஜ் ../

அட ... என்னங்க... இப்படி சொல்லீட்டீங்க.. எங்க தப்பா சொன்னீங்க?

Saravanan Trichy said...

//நான் அதே தமிழை மட்டும் கற்றதால் வீணாண அல்லது தமிழை கற்காமல் வேறு மொழி கற்றதால் முன்னேறிய 100 பேரை அடையாளம் காட்டுகிறேன்//
நீங்கள் அடையாளம் காட்டும் 100 பேர் வேற்று மொழி தெரிந்த ஒரே காரணத்தினால் தான் முன்னேறினார்களா என்ன.? மொழி கருத்துகளை பரிமாற்ற மட்டுமே. மொழி மட்டுமே அறிவு அல்ல. நம் அறிவை மொழி மூலமாக வெளிப்படுத்தும் போதுதான் நமக்கு வெற்றி கிட்டும். மொழி வெற்றியில் உதவும் சிறு துரும்பு மட்டுமே. இந்தி சரளமாகத் பேசத்தெரிந்தவன் பம்பாயில் மிட்டாய் விற்பதும் ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்தவன் அமேரிக்காவில் கீரை விற்பதும் ஏன்.? தமிழ் கற்றாலும் அல்லது நீங்கள் சொல்லும் எந்த மொழி கற்றாலும் மொழியை மட்டும் வைத்துக் கொண்டு யாராலும் முன்னேற முடியாது. அதே நேரத்தில் அறிவுடைய யாரும் எந்த மொழியும் தெரியாமலும் கூட முன்னேற முடியும்.

எந்த மொழியும் கற்கலாம் தவறில்லை அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஆனால் இந்தியை கட்டாய பாடமாக்குவது தேவையற்றது அதே போல் தான் ஆங்கிலமும். வேற்று மொழியை கற்க ஆயிரம் வழி இருக்க பாடத் திட்டத்தில் சேர்ப்பது தேவையற்றது.

//மொழி கருத்துகளை பரிமாறவே தவிர உணர்ச்சி பூர்வமாக அணுகக்கூடியது அல்ல... நீங்கள் நினைக்கலாம் இப்படியே விட்டால் தமிழ் அழிந்து போய் விடும் // புழக்கத்தில் இல்லாத எந்த மொழியும் அழிந்து போகும். இன்று நாம் பேசும் மொழியில் எது தமிழ் வார்த்தை எது மற்றமொழி வார்த்தைகள் என்பது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். இது தொடரும் போது கண்டிப்பாக மற்ற மொழி ஆதிக்கம் தோன்றி தமிழ் அழியும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்கள் அடையாளம் காட்டும் 100 பேர் வேற்று மொழி தெரிந்த ஒரே காரணத்தினால் தான் முன்னேறினார்களா என்ன.?//
வாங்க குட்டி பிரபு.. தமிழராய் பிறந்து தமிழை மட்டும் கற்காமல் முன்னேறியவர்கள்!!!

//இந்தி சரளமாகத் பேசத்தெரிந்தவன் பம்பாயில் மிட்டாய் விற்பதும் ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்தவன் அமேரிக்காவில் கீரை விற்பதும் ஏன்.?//
நண்பரே கவனிக்க.. நான் சொல்வது கல்வியறிவு.. இப்படி விற்பவர்கள் கல்லாதொரே!!!

//நீங்கள் சொல்லும் எந்த மொழி கற்றாலும் மொழியை மட்டும் வைத்துக் கொண்டு யாராலும் முன்னேற முடியாது. அதே நேரத்தில் அறிவுடைய யாரும் எந்த மொழியும் தெரியாமலும் கூட முன்னேற முடியும்.//
அப்படி இருக்க ஏன் நம் பாடத்திட்டங்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில கற்க வழி செய்ய கூடாது? ஒரு தலைமுறை முழுவதையும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கற்க வழி செய்யுங்கள்.. பிறகு பாருங்கள் வித்தியாசம் தெரியும்..

Saravanan Trichy said...

//அப்படி இருக்க ஏன் நம் பாடத்திட்டங்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில கற்க வழி செய்ய கூடாது? ஒரு தலைமுறை முழுவதையும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கற்க வழி செய்யுங்கள்.. பிறகு பாருங்கள் வித்தியாசம் தெரியும்..//

இப்போது அப்படிதானே நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக எந்த மொழியில் கற்றாலும் அறிவுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் கற்ப்பதால் முன்னேற வாய்ப்பு அதிகம் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதனால் நம் தாய்மொழிக்கு என்ன பயன்?. முழுக்க முழுக்க ஆங்கிலம் கற்கும் பொழுது நம் தாய் மொழி புழக்கத்திலேயே இல்லாமல் போய் விடாதா? நம்முடைய அறிவு அனைத்தும் ஆங்கிலத்தை வளர்க்க மட்டுமே பயன்படும் அல்லவா. தமிழ் படிக்காமல் பின் தமிழை எப்படி வளர்ப்பது.? அல்லது காப்பாற்றுவது?
குறைந்தபட்சம் +2 வரையாவது அனைத்து பாடங்களும் தமிழில் வேண்டும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆங்கிலத்தில் கற்ப்பதால் முன்னேற வாய்ப்பு அதிகம் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதனால் நம் தாய்மொழிக்கு என்ன பயன்?//
நான் தமிழன் முன்னேற வழி சொல்றேன் நீங்க தமிழ!!!!
எதுல பயன் அதிகம் சொல்லுங்க!!!மனுசன் பொழைக்கிறாதா இல்லே அவன் பேச உதவுற மொழி பொழைக்கிறாதா?

GEETHA ACHAL said...

நல்ல பதிவு..
கண்டிப்பாக தாய்மொழியாம் தமிழ், அனைவருக்கு பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலத்தினை தவிர வேறு எதாவது 1 - 2 மொழிகளை கற்று கொள்வது மிகவும் அவசியமானது..

சரி..விடுங்க நாம தான் கத்துகொள்ளவில்லை...Atleast இனிவரும் Generataionsயிற்காவது சொல்லி கொடுக்க வழிவகுக்க வேண்டியது அவசியம்...

Saravanan Trichy said...

தமிழனும் பிழைக்கணும் தமிழும் பிழைக்கணும். தமிழ் கட்டாயம் கற்க வேண்டும். ஆங்கிலமும் கற்க வேண்டும். இந்தி போன்ற மொழிகள் அவரவர் தேவைக்கேற்ப கற்க வேண்டும். ஆங்கிலம் கற்றால் தான் வேலைங்கற நிலைமை இந்த கம்ப்யுட்டர் துறையில இருக்கு. நானும் இதே துறையில இருந்தாலும் நான் படிச்ச ஆங்கிலத்துல எனக்கு பயன்படுறது அதிக பட்சம் 10,000 வார்த்தைகள் தான். இந்த 10000 வார்த்தைகள நான் 15 வருடம் முழுவதும் படிக்கனும்னு சொல்றீங்களா.? ஆங்கிலம் கண்டிப்பா படிக்கணும் அதுக்காக தமிழ ஒதுக்கிட கூடாது.

Unknown said...

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!//

யோவ் லூஸு , நான் ஹிந்தி தெரியாம மும்பை ல வாழ்ந்திருக்கேன் போதுமா

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கீதா ஆச்சல் said...

நல்ல பதிவு..
கண்டிப்பாக தாய்மொழியாம் தமிழ், அனைவருக்கு பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலத்தினை தவிர வேறு எதாவது 1 - 2 மொழிகளை கற்று கொள்வது மிகவும் அவசியமானது..

சரி..விடுங்க நாம தான் கத்துகொள்ளவில்லை...Atleast இனிவரும் Generataionsயிற்காவது சொல்லி கொடுக்க வழிவகுக்க வேண்டியது அவசியம்//

வாங்க .. அப்பா முதல் சப்போர்ட்!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

குட்டி பிரபு... தமிழ் தானா வந்திடுங்க.. ஏன்னா என்ன மொழி படிச்சாலும் வீட்டில, நண்பர்களிடன் தமிழில் தான் பேச முடியும்.. ஆனா தேசியமொழிய கத்துக்க ஏன் தடை?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//யோவ் லூஸு , நான் ஹிந்தி தெரியாம மும்பை ல வாழ்ந்திருக்கேன் போதுமா//

எந்த கஷ்டமு்ம் இல்லாம இருந்தீங்களா? ஒரு தடவ கூட வருத்தபடலயா நீங்க ?

நான் லூசு தாங்க..

ஆமா நீங்க அப்துல்கலாமுக்கு அஸிஸ்டெண்டா இருநதீங்களா?

Saravanan Trichy said...

தேசிய மொழி கத்துக்க எந்த தடையும் இல்ல. இந்தி கத்துக்கணும்னு நினைக்கிரவுங்க மாதம் முப்பது ரூபா கொடுத்து இந்தி பிரச்சார சபாவுல கத்துக்கலாமே. அத விட்டுட்டு நீ இந்தி கண்டிப்பா படிச்சே தீரனும்னு சட்டம் போட்டா என்ன பண்ணுறது. ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இந்தி கத்துக்கணும்னு நினைக்கிரவுங்க மாதம் முப்பது ரூபா கொடுத்து இந்தி பிரச்சார சபாவுல கத்துக்கலாமே. அத விட்டுட்டு நீ இந்தி கண்டிப்பா படிச்சே தீரனும்னு சட்டம் போட்டா என்ன பண்ணுறது...//

அப்படி வாங்க !! ஆக பணம் இருக்கிறவன் தான் ஹிந்தி கத்துக்க முடியுமா? ஏன் அரசு பள்ளிகளில் அரசு உதவியுடன் தேசிய மொழியை கற்க வழி செய்ய கூடாது? அப்படி செய்தால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் நம் தேசிய மொழியை கற்க முடியுமே? ஏன் அதை ஒளித்து வைக்கவேண்டும்.. மொழி தான் அதுவும் தேசிய மொழி அதுவும் அரசு செலவில் ஏன் வேண்டாம் எங்கின்றீங்கள்?

Menaga Sathia said...

//நான் பொருள் கேட்கும் அழகே தனி(!!) என்னமோ ஹிந்தி பண்டிட் போல கித்னா ரூப்யா எனக்கேட்பேன்.. அதற்கு அந்த நபர் 10 வரை கூறினால் பிரச்சினை இல்லை.. ஏனென்றால் நமக்கு தெரியும்.. ஆனா அவர் பத்துக்கு மேல் 11, 20, 30 என சென்றால் அவ்வளவு தான்.. இரு கைகளையும் மேலே தூக்காத குறையாக சரணாகதி அடைந்து விடுவேன்.. பிறகு ஆங்கிலம் தான்.. ஆங்கிலத்தில் கேட்டால் முதலில் அவர் ஹிந்தியில் எவ்வளவு சொன்னாரோ அதை விட ஒரு சில ரூபாய்கள் கூட தான் கேட்பார்கள்!!! இப்படி இழந்தது பல!!!// ஒரே சிரிப்புதான் போங்க.

எனக்கு அரைகுறை ஹிந்தி,ப்ரெஞ்ச் தெரியும்.பலமொழிகள் கத்துக்க ஆசைதான்.என் பொண்ணுக்காவது அதெல்லாம் செய்யனும்னு நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரை ஆங்கிலம் கத்துக்கொள்வதுதான் பெஸ்ட்.எந்த நாட்டிற்க்கும் போகலாம்.தமிழ் கத்துக்கிட்ட தமிழ்நாட்டுல தான் பேசனும்.அதுவும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழ் பேசினாலே கொலைதான்.அந்தளவுக்கு நம்ம நாட்டிலேயே மொழிவெறி பிடித்துப் போயிருக்கோம்.இந்த நிலை மாறனும்.

//" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"// நியாயமான கேள்வி.

இனிவரும் தலைமுறைக்காவது கூடுதல் மொழியை சொல்லிக் குடுப்போம்.

Saravanan Trichy said...

தாராளமா இலவசமா கத்து குடுக்கலாம். தேசிய மொழி இந்தினு சொல்லுறதெல்லாம் சுத்த பேத்தல் அச்சுல மட்டுந்தான் இந்தி தேசிய மொழி. இந்தி தேசிய மொழியா தேர்ந்தேடுக்கப்பட்டப்ப அது எத்தன ஒட்டு பெற்றதுன்னு பாத்திங்கன்னா தெரியும்.ஆனா தேசிய மொழின்னு பேர் வச்சிருக்குற ஒரே காரணத்துக்காக பாடத்திட்டத்துல கட்டாயப் பாடமா சேக்க வேணாம். இலவசமா கத்துக்குடுத்தா தாராளமா விருப்பமிருந்தா நேரமிருந்தா கத்துகுறோம்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

Mrs.Menagasathia said...
//ஒரே சிரிப்புதான் போங்க.//

நன்றிங்க!!!

ஆமாங்க கண்டீப்பா .. அப்பாடா இரண்டாவது ஆதரவு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க குட்டி பிரபு.. என்னங்க அப்போ தேசிய மொழி என்பது எது? கபில் சிபில் திட்டபடி அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கட்டாயமாக, இலலவசமாக கற்றுக்கொடுக்கப்படுங்க!!!

Saravanan Trichy said...

இந்தியாவுல பெருவாரியான மக்கள் பேசுற மொழிங்க்ற ஒரே காரணத்துக்காக இந்தி தேசிய மொழின்னும் அத கண்டிப்பா நீ கத்துக்கனும்ங்க்றதும் யப்பா நம்மால முடியாது. 100-ல 5-பேருதான் வடநாட்டுக்கு போறான் தமிழ்நாட்டுல இருந்து. இலவசமா கத்துகுடுங்க அந்த 5 பேரு கத்துகிட்டு போறான். மத்த 95 பேரையும் கட்டாய பாடம் வச்சு ஏன் டார்ச்சார் பண்ணுறீங்க.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//100-ல 5-பேருதான் வடநாட்டுக்கு போறான் //

அதாங்க.. இன்னும் கொஞ்ச பேர அனுப்பலாம்னு தாங்க!!! இந்த மொழிகள் எல்லாம் ஒரு குறிப்பிடட வயது வரைக்கும் தாங்க எளிதில் கற்க முடியும்.. அதனால தான்.. நம்ம மாநிலத்தில மட்டும் தாங்க இந்த பைத்தியகாரத்தனமான ஹிந்தி எதி்ர்ப்பு.. அதனால தான் நாம எங்கே ஊர விட்டு வெளீய போனா கஷ்டப்பட வேண்டி இருக்கு..

Saravanan Trichy said...

//இன்னும் கொஞ்ச பேர அனுப்பலாம்னு தாங்க!!! //
நீங்க ஏன் அனுப்பனும்னு நினைக்கிறீங்க. போகனும்னு நினைக்கிறவன் இந்தி கத்துட்டு போறான் இல்ல அங்க போயி கத்துகுறான். இங்கயே இருக்கணும்னு நினக்கிரவனுக்கு எதுக்குங்க இந்தி.

//நம்ம மாநிலத்தில மட்டும் தாங்க இந்த பைத்தியகாரத்தனமான ஹிந்தி எதி்ர்ப்பு//

வட மாநிலங்கள்ல தமிழ்நாட்டுக்கு போறவங்களுக்கு தமிழ் அவசியம்னு பாடதிட்டத்துல சேக்க சொல்லுங்க! அப்பறம் தெரியும் உங்களுக்கு எது பைத்தியகாரத்தனம்னு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இங்கயே இருக்கணும்னு நினக்கிரவனுக்கு எதுக்குங்க இந்தி. //

ஏங்க அவன் என்ன பாகிஸ்தானுக்கா போரான்.. நம்ம நாட்டுக்குள்ள தான் போரான்.. அப்படி போரவன் எல்லாம் முன்னேர தான் போரான்.. அரசாஙக அதிகாரி, அரசியல்வாதி,கணிப்பொறி, அன்றாட் காய்ச்சிகள் அப்படின்னு அடுத்த மாநிலத்த நம்பி நாம இருக்கோம்.. ஏன்னா தமிழ் தமிழ்னு சொல்லி கிணற்று தவளையா இருக்கிறாங்க..

ஆனா இநத இத்துப்போன தமிழ் பேர சொல்லி நாம மட்டும் முன்னேறி அடுத்தவன முன்னேர விடாம இருக்கிறது துரோகம்.

உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, உங்க பசங்கள தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் சொல்லித்தர அரசாஙக பள்ளீயில படிக்க வைப்பீஙகளா? இல்லே ஹிந்தியும் சேர்த்து சொல்லித்தர கான்வென்டில சேர்ப்பீங்களா? ஏன் அரசாஙகமே ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை இலவசமா கற்று தந்தா அத ஏன் இப்படி எதிர்க்கிறீங்க?

நாய் திருடிய தேங்காய் தான் நியாபகம் வருதுங்க ங்க மாதிறி ஆளுகள பாத்தா..
கடைசியா சில கேள்விங்க.. நேரடியா பதில் சொல்லுங்க,,

தமிழ் மட்டும் படிச்சா என்ன பிரயோஜனம்?

தமிழ்படிக்கலேண்ணா என்ன நஷ்டம்?

அரசாங்க செலவில ஹிந்தி படிச்சா எனன தப்பு?

*இயற்கை ராஜி* said...

//நான் தான் புத்தி சாலி ஆயிற்றே //
இதெல்லாம் மொதல்ல சொல்றதில்லியா:-))

*இயற்கை ராஜி* said...

நிதர்சனமான உண்மை..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க இயற்கை.. ஹி ஹி ஹி..

நன்றிங்க!!!

ப்ரியமுடன் வசந்த் said...

உண்மைதான் ராஜ் இங்க முதல்தடவை வந்ததும் ஹிந்திதெரியாம ரொம்ப கஷ்டமாயிடுச்சு....

அப்பறம்

//" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"//

இது நச்

Saravanan Trichy said...

இந்தியாவின் தேசிய மொழின்னு நீங்க சொல்லுற இந்தி ஆட்சி மொழியா இருக்குறது ஒன்பது மாநிலங்கள்-ல மட்டுந்தான். மற்ற இருபத்து மாநிலங்கள்லயும் வெவ்வேறு மொழிகள். இந்த ஒன்பது மாநிலங்களையும் இந்தி அதாவது அவர்களின் தாய் மொழி கட்டாயப் பாடம். ஆங்கிலமோ அண்டை மாநிலத்தவர் மொழியையோ அவங்க ஏற்றுக்கொள்ள தயாரா இல்ல. அப்படினா மற்ற மாநிலங்களுக்கு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர் என்ன மொழி கத்துகிட்டு வராங்க? ஹிந்திக்கு அடுத்த படியா அதிகம் பேசப்படும் தெளுங்கயா ? அல்லது குஜராத்தி மராத்தி இல்ல குறைந்தபட்சம் ஆங்கிலமாவது. எதுவுமே இல்லை. அவர்களுக்கு கட்டாய பாடம் ஹிந்தி மட்டுமே. ஆனா மற்ற மாநிலத்தவன் மட்டும் மூன்று மொழிகள் படிக்கனுமா.?
//ஏன் அரசாஙகமே ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை இலவசமா கற்று தந்தா அத ஏன் இப்படி எதிர்க்கிறீங்க?//
//அரசாங்க செலவில ஹிந்தி படிச்சா எனன தப்பு?//

. நீங்க சொன்னபடி பாத்தா வடமாநிலங்களுக்கு வேலைக்கு போறவங்களுக்கு இந்தி பேசவும் பழகவும் தேவை. நான் ஹிந்திய கற்க கூடாதுன்னு சொல்லல. கட்டாயப்பாடமக்கக் கூடாதுன்னு தான் சொல்றேன். கட்டாயமக்குனா என்ன பிரச்சனை.?-நு நீங்க கேக்குறிங்க. தமிழகத்துல நூற்றில் 80 % பேர் படிப்பது கிராமத்தில் உள்ள சாதாரண பள்ளிக்கூடங்கள்-ல. அங்க இப்ப கட்டாயமா இருக்குற ஆங்கிலப் பாடம் படிச்சு 35 மதிப்பெண் எடுக்குரதுகுல்லையே முழி பிதுங்கிடுது. தமிழ் பாடத்திலும் மற்ற பாடங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றாலும் வேற்று மொழியான ஆங்கிலம் அவங்களுக்கு பெரிய சுமையாகவே இருக்கு. இந்த நிலையில மற்றொரு வேற்று மொழியான ஹிந்தியையும் திணிச்சா அவனோட நிலைமை என்ன.?
அந்த கிராமப்புற மாணவர்களோட நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும். இந்தி கட்டாய பாடமக்கப்பட்டால் இந்த கீழ்மட்டத்தில் இருக்கும் 80% பேரும் கண்டிப்பாக பாதிப்படைவார்கள்.
ஹிந்தி படிக்க விருப்பமுள்ளவர்களுக்காக ஹிந்தியை விருப்ப பாடமாக படிக்கலாம்
அரபி படிக்க விருப்பமுள்ளவர்களுக்காக அரபியை விருப்ப பாடமாக படிக்கலாம்
கன்னடம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்காக கன்னடத்தை விருப்ப பாடமாக படிக்கலாம் .

Jaleela Kamal said...

தமிழைத்தவிர , ஆங்கிலமும், ஹிந்தியும் தெரிந்திருந்தால் உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் பிழைத்து கொள்ளலாம்..

இல்லை என்றால் எங்கு போனாலும் சைகை மொழிதான் பேசும் படம் போல் பேச முடியும் இதிலே இருக்கிற நாலு முடியும் பிச்சிக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

////ஆக, அடுத்த மாநிலத்தில் பிச்சை எடுக்க கூட தேசிய மொழியோ , இல்லை அந்த மாநிலத்தின் தாய் மொழியோ அவசியம்..////

உண்மை தான்.....

நல்ல ஒரு பதிவு... வாழ்த்துக்கள்.....

கார்த்திக் said...

ஹிந்தி ஆங்கிலத்தோடு மலையாளத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. உலகத்தில் எல்லா மூலைகளிலும் கேரள மக்களின் ராஜியமே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உண்மைதான் ராஜ் இங்க முதல்தடவை வந்ததும் ஹிந்திதெரியாம ரொம்ப கஷ்டமாயிடுச்சு....

அப்பறம்

//" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"//

இது நச்//

வாங்க வசந்த்!! என்ன பண்றதுங்க.. சில பேருக்கு இன்னும் அது தெரிய மாட்டேங்குது..

குறை ஒன்றும் இல்லை !!! said...

குட்டி பிரபு ...தூங்கரவங்கள எழுப்பலாம்,..ஆனா உங்கள மாதிறி தூங்கர மாதிறி நடிக்கிறவங்கள எழுப்புவது கஷ்டம்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஜலீலா, சப்ரஸ் மற்றும் கார்த்திக்.. நன்றிங்க,,

கார்த்திக் ஹிந்திக்கே இந்த போடு இன்னும் மலையாளம் என்றால்!!

jothi said...

எனக்கு பிடித்த உங்களின் பதிவுகளில் இது முதலில் நிற்கும். மிக விளக்கமான் பின்னூட்டம் இட ஆசை. ஆனால் பலனில்லை. கற்றது தமிழ் அருமையாக சொல்லி இருக்கும். தமிழில் படிப்பது நல்லதுதான். ஆனால் அது இன்றைக்கு கண்டிப்பாக சோறு போடாது. அதுதான் யதார்த்தமான் உண்மை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//jothi said... :தமிழில் படிப்பது நல்லதுதான். ஆனால் அது இன்றைக்கு கண்டிப்பாக சோறு போடாது. அதுதான் யதார்த்தமான் உண்மை//

வாங்க ஜோதி.. நன்றிங்க... ஆனா உண்மை எப்போவுமே கசக்கும் இல்லேங்களா அதான் சில பேர் ஒத்துக்க மாட்டாங்க..

கிரி said...

// நம்மில் எத்துனை பேருக்கு ஹிந்தி தெரியும்//

ஹிந்தி நகி மாலும் :-)

//ஆனா அவர் பத்துக்கு மேல் 11, 20, 30 என சென்றால் அவ்வளவு தான்.. //

ஹி ஹி ஹி


//கீதா ஆச்சல் said...
சரி..விடுங்க நாம தான் கத்துகொள்ளவில்லை...Atleast இனிவரும் Generataionsயிற்காவது சொல்லி கொடுக்க வழிவகுக்க வேண்டியது அவசிய//

ராஜ் என்ற பச்ச! புள்ளியை இப்படி கபால்னு வயசான லிஸ்ட் சேர்த்ததற்கு என் கண்டனங்கள் ;-)

//ஆமா நீங்க அப்துல்கலாமுக்கு அஸிஸ்டெண்டா இருநதீங்களா//

:-)))

அதெல்லாம் சரி ராஜ்.. ஏன் இந்த கொலை வெறி கோபம்.. யாருப்பா தமிழை வைத்து ராஜை கலாயித்தது :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரி said...

//ஹிந்தி நகி மாலும் :-)//

நானும் தாங்க!!!

//ராஜ் என்ற பச்ச! புள்ளியை இப்படி கபால்னு வயசான லிஸ்ட் சேர்த்ததற்கு என் கண்டனங்கள் ;-)//

நன்றிண்ணே,,.ஆனா இது காமெடி இல்லேயே!!

//அதெல்லாம் சரி ராஜ்.. ஏன் இந்த கொலை வெறி கோபம்.. யாருப்பா தமிழை வைத்து ராஜை கலாயித்தது :-)//

பாருங்கண்ணே,,,

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை பள்ளிகளில் படித்தால் தவறில்லை, நம் தேசிய மொழியான ஹிந்தியை படித்தால்,படித்து நம்மவர்கள் வடக்கே சென்று விட்டால் இங்கே எதை வைத்து அரசியல் பண்ணுவது??
எனக்கு ஹிந்தி தெரியாது என்ற ஒரே காரணத்தால் எனக்கு வேலை தரவில்லை ஒரு நிறுவனம். இதையெல்லாம் எந்த லூசிடம் போய் சொல்வது

வருண் said...

இந்த தொடர்பதிவுக்கு உங்களை அழைத்துள்ளேன்! கொஞ்சம் கருணை காட்டுங்க!

http://timeforsomelove.blogspot.com/2009/09/blog-post_2112.html

GEETHA ACHAL said...

இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
கீதா ஆச்சல்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி சப்ரஸ், வருண் மற்றும் கீதா...

சரியா சொன்னீங்க கிகி.,..

Sathik Ali said...

குறை ஒன்றும் இல்லாத பதிவு.மனிதனுக்காத்தான் மொழி.மனிதர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கருவி தான் மொழி.அதற்கு மேல் பக்தி பாசம் எல்லாம் அதன் மேல் தேவை இல்லை.ஆயிரம் வருடங்களுக்கு முன் பேசிய தமிழ் அல்ல இப்போது பேசுவது.காலத்திற்கேற்ப மாறுவதுதான் மொழி.மாறாதது அழிந்து போகும்.தமிழனிடம் தமிழ் பேசலாம்.ஆனால் இன்று உலகமெல்லாம் தொடர்பு கொள்ளும் மனிதனுக்கு பிற மொழி அறிவு அத்தியாவசியம்.அதற்காக எல் கேஜியிலிருந்தே ஆங்கிலமும் இந்தியும் கற்க வேண்டியது இல்லை.தமிழ் அடிப்படை மொழியாக பயின்றபின் ஆங்கிலம்,இந்தி கற்கலாம்.அதுவும் பள்ளியிலே கற்றுக்கொடுக்க வேண்டும்.அதுவும் ஒர் அறிவு தானே. கற்பதற்கு தானே பள்ளிகள்.பிற மொழிகள் மேல் மோகமும்.காழ்ப்புணர்சியும் தேவையில்லை.என்னதான் அறிவாளியாக இருந்தாலும் சரியான மொழியறிவு இல்லாவிட்டால் பிற மொழிக்காரர்களிடம் நம் கருத்தை சொல்வது கடினம் தான்.அது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.சாதி வெறி மத வெறி போல் மொழி வெறி தேவையில்லை.மொழியை நாம் காப்பாற்ற வேண்டியதும் இல்லை.அது சிறந்ததாக இருந்தால் தன்னைத்தானே காப்பற்றிக்கொள்ளும்.தமிழர்கள் வேட்டிதான் உடுத்தவேண்டும் பேன்ட் போடக்கூடாது என்றால் எப்படி?

தீப்பெட்டி said...

உங்க கருத்தோட நிறைய முரண்பாடு இருக்கு..

மொழிப்பற்று தேவையில்லைனு சொன்னா தேசிய மொழி அவசியமே இல்லையே.. பிரந்திய மொழிப்பற்று மிககுறுகிய வட்டம் என்றால் தேசிய மொழிப்பற்று குறுகிய வட்டம்..

நம் வாழ்க்கைக்கு தேவையான மொழியை நாம் கற்றுக்கொள்ள எல்லா வாய்ப்பும் உள்ளது. மனிதனுக்கு அவன் வாழ்க்கைக்கு தேவையான மொழியை கத்துக்கிட்டு அவன் முன்னேறிக்குறான்.. தேசிய மொழி அப்படிங்குறதே தேவையில்லாத விசயம்.. உலகலாவிய ஆங்கில மொழி மட்டும் உலகத்தோடு தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ளுதல் அவசியம்..

இந்திய அரசும் தேசியமொழி என்கிற வார்த்தையை தூக்கியெறிந்து விட்டு ஆங்கிலத்தை மட்டும் அரசு மொழியாக வைத்து இந்திய மக்களை உலகளாவிய சிந்தனையோடு உலகை தொடர்பு கொள்ள உதவ வேண்டும்..

தீப்பெட்டி said...

//அவர்கள் வீட்டில் பேசும் போது தமிழ் தானாக வந்து விட்டு போகட்டும்//

வீட்டில் மட்டும் பேசும் மொழி எப்படி இருக்கும்? இன்று வீட்டில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீதம் உண்டு.. அவர்களது தெலுங்கு எந்தளவு வளர்ந்துள்ளது? அல்லது தேய்ந்துள்ளது என பக்கத்து ஆந்திராவுக்கு போய் பார்த்தால் தெரியும்..

அதற்கு உதாரணம் உங்கள் கட்டுரையிலே உள்ளது..

அதற்கு காரணம் ஆந்திர மக்கள் படிப்பு, சிந்தனை, அலுவல்மொழி எல்லாம் தெலுங்கு.. இங்கு எல்லாம் தமிழ்..

நீங்கள் சொல்வதுபோல் வீட்டில் மட்டும் பேசினால் எப்படியிருக்கும்?

மொழியென்பது ஆயிரமாண்டுகளை கடந்து வாழ்வது அதன் பயணத்தை நமது ஒரு தலைமுறை அனுபவத்தைக் கொண்டு தீர்மானிக்க முடியாது..

தீப்பெட்டி said...

//ஹிந்தி தெரியாமல் எத்துனை பேர் அடுத்த மாநிலங்களில் கஷ்டப்பட்டுள்ளீர்? நான் ஒரு சமயம் ஹைதியில் இருந்த போது நான் பட்ட கஷ்டம்!!!!//

உண்மைதான்.. நான் கூட துபாயில் இருந்த போது அரபு மொழி தெரியாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளது..
அதற்கு காரணம் பள்ளியில் இலவச கல்வியில் அரபுமொழியை கற்று தராத அரசியல்வாதிகளின் குறுக்குபுத்தியும்,
தேசிய மொழியாகவோ, அல்லது 16 பிரந்திய மொழிகளோடோ அரபு மொழியை சேர்க்காத நேரு,அம்பேத்கர் போன்ற அரசியலமைப்பு சிற்பிகளின் குறுகிய மனப்பான்மையும் தான்..

இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசியலமைப்பு சட்டமும் இந்த தேசிய மொழியெனும் குறுகிய மனப்பன்மையிலிருந்து வெளிவரவேண்டும்.. உலகம் இந்தியாவைவிட எத்துணை பெரியதென்று உணர வேண்டும்..


இந்திக்காக பதிவையிடும் தாங்கள் எனக்காக பள்ளியில் இலவச அரபு மொழி கற்பிப்பதற்கும் எனது நண்பன் மதனுக்காக பள்ளியில் இலவச ஜெர்மன் மொழி கற்பிப்பதற்கும் பதிவிட்டு குரல் கொடுப்பீர்களானால் மிக்க மகிழ்ச்சியடைவேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி சாதிக் அலி மற்றும் தீப்பெட்டி..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!